கேரளாவுக்கு ஆம்னி வேனில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது..!

கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கோவை மதுக்கரை – பாலக்காடு மெயின் ரோடு கலைவாணி மெட்ரிக் பள்ளி அருகில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த ஒரு ஆம்னி காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 17 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளை கைப்பற்றி வாகனம் ஓட்டி வந்த சுந்தராபுரம் பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டனைச் சேர்ந்த முகமது உசேன் (வயது 36) என்பவரை கைது செய்தனர். இவர் மதுக்கரை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா மாநிலம் கஞ்சிக்கோட்டில் உள்ள இப்ராஹிம் ராவுத்தர் என்பவருக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் கேரளாவில் கள்ளச் சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி வரும் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..