கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடக்கிறது. அதிகாலை, நள்ளிரவு என எந்த நேரத்திலும் சிலர் ரகசியமாக கஞ்சா விற்பனை நடத்தி வருகிறார்கள்.
மாவட்ட அளவில், நடப்பாண்டில் இதுவரை 350 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 420 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கஞ்சா வியாபாரம் குறையவில்லை. அரசூர், கணியூர், நீலாம்பூர், கோவில்பாளையம், அன்னூர், சூலூர்,தொண்டாமுத்தூர், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வட்டாரங்கனில் கஞ்சா வியாபாரம் பரவலாக நடக்கிறது. கஞ்சா பொட்டலங்களை வீடு தேடி சென்று வழங்கும் வியாபாரிகளும் இருக்கிறார்கள். வீதியின் குறிப்பிட்ட சில இடங்களை அடையாளமாக வைத்து கஞ்சா வியாபாரம் நடக்கிறது. காலியிடம், மைதானம், புதர்காடு, பெட்டிக்கடை என பல இடங்களில் கஞ்சா வியாபாரம் நடந்து வருகிறது.
சிலர் கஞ்சாவை மூட்டை முட்டையாக வாங்கி வந்து பதுக்கி வைத்து கிலோ கணக்கில் ரகசியமாக சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். சில்லரை வியாபாரிகள், கஞ்சா பயன்படுத்தும் நபர்களுக்கு 20 கிராம், 50 கிராம் என பொட்டல் போட்டு விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து புறநகர் போலீசார் கூறியதாவது:-
இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள், வாலிபர்கள் கஞ்சா போதையை விரும்புகிறார்கள். எந்த நேரத்திலும் இவர்கள் கஞ்சாவை தேடி வருகிறார்கள். பொட்டலம் கஞ்சா ரூ.100 முதல் 300 வரை விற்பனை செய்கிறார்கள்.
போலீசார் ரோந்து சென்று கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகிறோம். ஆனால் சில நாட்களில் அதே பகுதியில் வேறு ஒருவர் வைத்து கஞ்சா விற்பனை செய்கிறார். சிலர் வேறு தொழில் செய்கிறார்கள்.
மில்லில் வேலை செய்யும் நபர் ஒருவர் அதே மில்லில் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தார். பல இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது. வடமாநிலங்களில் இருந்து பார்சலில் கஞ்சா வருகிறது. இதனை எப்படி தடுப்பது? எவ்வாறு தடுப்பது என தெரியவில்லை. பல வகைகளில் கடத்தி வருகிறார்கள்.
குறிப்பிட்ட சில பகுதிகளில் அடிக்கடி ரோந்து பணி நடத்தினால் மட்டுமே கஞ்சா வியாபாரத்தை கட்டுப்படுத்த முடிகிறது. கஞ்சா பயன்படுத்துவோர் அதிகமாகி வருவதும், கஞ்சா தடையின்றி சப்ளையாவதும் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply