எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்… நாளை விண்ணில் பாய்கிறது..!

ஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் , சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

இந்த ராக்கெட்டில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயற்கைகோள்களை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தமுடியாமல் போனது. இதனையடுத்து இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி.-2 ரக ராக்கெட்டை வடிவமைத்தது. இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. 1 ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக மாற்று செயற்கைகோள்கள் செலுத்தப்பட உள்ளன.

அதன்படி இந்த ராக்கெட்டில் தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில், 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து ராக்கெட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது..