வால்பாறை வனச்சரகம் அப்பர் ஆழியார் பள்ளம் பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழப்பு..!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகம் அப்பர் ஆழியார் வனச்சரகப்பகுதியில் நேற்று காடம்பாறை வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் ரோந்துப்பணி மேற்க் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அப்பர் ஆளியார் பள்ளம் பகுதியில் பெண் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ தேஜா உத்தரவிற்கிணங்க நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் அட்டகட்டி பயிற்சி மைய உதவி இயக்குநர் செல்வம், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் உயிரிழந்த பெண் காட்டு யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது .உடற்கூராய்வு செய்யப்பட்ட பெண் யானையின் வயது சுமார் 40 முதல் 50 வயது இருக்கலாம் எனவும் ஆண் காட்டு யானையுடன் சண்டையிட்டதில் ரத்தப் போக்கு அதிக அளவில் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப் பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.