சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் கடந்த மார்ச் மாதம் உயர்வை கண்டது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக கேஸ் விலை உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் முதல் தேதியில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.29.50 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.1929-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் அதே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை நாடு முழுவதும் ரூ.60 உயர்ந்தது. சென்னையில் இது ரூ.868.50-லிருந்து ரூ.928.50-ஆக உயர்ந்தது. அதேநாளில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலையும் ரூ.115 உயர்ந்தது. சென்னையில் இது ரூ.1,929-லிருந்து ரூ.2,043.50-ஆக கேஸ் விலை உயர்ந்தது. மார்ச் மாதத்தில் மட்டும் வணிக சிலிண்டர் விலை ரூ.144.50 காசுகள் உயர்ந்தது.
தொடர்ந்து ஏப்ரல் 01-ம் தேதி சென்னையில் 19 கிலோ வணிக எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்தது. சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.2043.50-லிருந்து ரூ.2246.50 காசுகளாக உயர்ந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ 990.50 காசுகள் உயர்ந்து ரூ.3,237க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MKStalin) கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.இந்த கேஸ் சிலிண்டர் விலை ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக மூத்த பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது, இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை, பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை. வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிகமான மாற்றம் மட்டுமே” எனக் கூறினார்.









