தாளவாடி மலைப்பகுதியில் ஓராண்டாக அட்டகாசம் செய்த கருப்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்- அந்தியூர் வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தினமும் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை கடந்த ஓராண்டு காலமாக விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்த காட்டு யானை இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றதோடு பல லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. கருப்பன் யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் வனத்துறையினர் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதற்கென பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து 2 முறை கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு யானையை பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து ஒருமுறை கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது. பல்வேறு கட்டமாக நடந்த யானை பிடிக்கும் முயற்சியில் கருப்பன் யானைக்கு பலமுறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை சிக்காமல் போக்கு காட்டியது. மூன்று முறை யானையைப் பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில்  நான்காவது முறையாக கடந்த சனிக்கிழமை இரவு பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி மற்றும் மாரியப்பன் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. யானையை பிடிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கருப்பன் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதற்கு இடையே நேற்று முன்தினம் இரவு தாளவாடி அருகே உள்ள மகாராஜன்புரம் பகுதியில் விவசாயி மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில்  கருப்பன் யானை நடமாடியதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று கரும்பு தோட்டத்தை சுற்றி வளைத்தனர்.  இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை சின்னத்தம்பி மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை பயன்படுத்தி கருப்பன் யானைக்கு ஒசூர் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ், ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து கருப்பன் யானை பாதி மயக்க நிலைக்கு வந்து கரும்பு தோட்டத்தில் நகராமல் நின்றது.  இதையடுத்து  இரண்டு கும்கி யானைகளை பயன்படுத்தி யானையை லாரியில் ஏற்றும் பணி நடைபெற்றது. லாரியில் ஏறாமல் அடம்பிடித்த கருப்பன் யானையை கும்கி யானைகள் முட்டி தள்ளி இரண்டு மணி நேரம் போராடி லாரியில் ஏற்றப்பட்டது. பிடிக்கப்பட்ட யானையை முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறதா அல்லது பொள்ளாச்சி டாப்ஸ்லிப் முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து விபரங்களை வனத்துறையினர் தெரிவிக்காததால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து லாரியை ஏற்றப்பட்ட கருப்பன் யானை ஆசனூர் திம்பம் மலைப்பாதை மற்றும் சத்தியமங்கலம் வழியாக அந்தியூர் நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி கர்கேகண்டி வனப்பகுதியில் கருப்பன் யானையை விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஓராண்டாக தாளவாடி மலை பகுதியில் விவசாயிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்த கருப்பன் யானையால் இரவு நேர தூக்கத்தை தொலைத்து இன்னல்களுக்கு ஆளான நிலையில் தற்போது வனத்துறையினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்ததால் தாளவாடி மலைப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கடும் முயற்சி மேற்கொண்டு கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினருக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராஜ்குமார், ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.