சூடானில் தொடரும் வன்முறை… பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது- 1,800 பேர் படுகாயம்..!

சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், சூடானின் ராணுவத் தலைவர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹா-னுக்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (ஆர்.எஸ்.எஃப்)யின் தலைவரும், ராணுவத் துணைத் தலைவருமான முகமது ஹம்தன் டாக்லோ-வுக்கும் கடந்த ஒரு வாரமாக யுத்தம் நடந்துவருகிறது.

கடந்த சனிக்கிழமை முதல் இரு ராணுவப்படைகளுக்கிடையே யுத்தம் மூர்க்கமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதில், வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் சூடானில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மின் தடை, உணவுப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ரொட்டி மற்றும் பெட்ரோலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். மேலும், மருத்துவ மனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்த யுத்தத்தால் ஏறத்தாழ 200 பேருக்கும் மேல் பலியாகியிருப்பதாகவும், 1,800-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மருத்துவமனைகளில் மருத்துகளின் இருப்பு குறைந்து வருவதாகவும், சிகிச்சைக்கு போதிய நேரம் இல்லாததாலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்,”சூடானின் இந்த பதற்றம் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த தாக்குதல்கள்  தொடர்ந்து அதிகரித்தால் நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார். சூடானின் அண்டை  நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் போர் நிறுத்தம் குறித்து கலந்துரையாடியதாக அறிவித்திருக்கின்றன.