வீரமணி வழக்கு: AC யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

 தமிழகத்தை உலுக்கிய ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து அதிகாரிகளும் நடவடிக்கைக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் ஜெம் கிரைனைட் வீரமணியின் பாலியல் வன்முறைகள் குறித்த வழக்கை விசாரித்து ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை முடித்து வைப்பதாக அறிக்கை தாக்கல் செய்த காவல் உதவி ஆணையர் யாஸ்மின் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ் மற்றும் கோவை மண்டல ஐஜி கண்ணன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஜெம்’ வீரமணி மீதான போக்சோ வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிரான புகார் தொடர்பாக விசாரணை நடத்தி எந்த தகவலையும் கண்டறிய முடியவில்லை என நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை அளித்த விசாரணை அதிகாரியான விபசார தடுப்புப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த யாஸ்மின் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

தற்போது கோயம்பேடு உதவி காவல் ஆணையராக பணியாற்றி வரும் யாஸ்மின் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில், இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் மீதும், இந்த புகார் தொடர்பான விசாரணையை முறையாக மேற்பார்வையிடாத அப்போதைய சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கண்ணன், போலீஸ் ஆணையர் அருண் ஆகியோர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

சென்னை போலீஸ் பயிற்சி அகாடமி கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்து வந்த அருண், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் டாக்டர் ஐ.ஜி. கண்ணன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி காட்டியது. தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில், காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்து இருப்பது வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர்களிடம் இனி விசாரணை நடத்தப்பட்டு அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாயலாம் என்று காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜெம் கிரானைட்ஸ் நிறுவனரான தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இவருரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என கூறப்படுகிறது.

ஜெம் கிரானைட் வீரமணியின் பாலியல் வன்முறையால், இன்னும் எத்தனை சிறுமிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்? எவ்வளவு நாட்களாக குற்றம் நடந்தது? வேறு யார் யாருக்கு எல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து முழுமையாக விசாரிக்க காவலில் எடுத்துள்ள இருவரிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். வீரமணி வழக்கில் இருந்து தப்பிக்க யார் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார் என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.