அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை சிறப்பித்தார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி கவனம் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றினார்.இந்த விழாவில் GOQii சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் விஷால் கோண்டல், பிரபல நட்சத்திர சமையல் கலைஞர் விகாஸ் கன்னா, கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபி தல்லா உள்ளிட்ட பல முக்கிய இந்திய வம்சாவளி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. அதிபர் டிரம்ப் குத்துவிளக்கேற்றி விழாவில் பங்கேற்றார்.இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, இந்திய தொழிலதிபர் விஷால் கோண்டல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அனுமன் சாலிசா புத்தகத்தின் பிரதியைப் பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட விஷால் கோண்டல், அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஓவல் அலுவலகத்தில் தீபாவளியைக் கொண்டாடியது பெருமைக்குரிய தருணம் என்றும், அவருக்கு அனுமன் சாலிசா பிரதியைப் பரிசளித்ததில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நட்புறவு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்றும், உலகம் முழுவதும் அமைதி மற்றும் செழிப்பு நிலவ வேண்டும் என்றும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த தீபாவளி கொண்டாட்டப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.







