ஐரோப்பிய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்-பீதியில் பயணிகள்

ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ரியான் ஏர் விமானம் 180 பயணிகளுடன் பல்கேரியாவின் சோஃபியா நகருக்கு சென்றது. தரையிறங்கும் நேரத்தில் இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனே, சுதாரித்துக்கொண்ட விமானி அவசரமாக ப்லோவ்டிவ் விமான நிலையத்தில் தரையிறக்கினார். உடனே, பயணிகளை இறக்கிவிட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விமானம் முழுவதும் ஆய்வு செய்தனர். ஆனால், சந்தேகப்படும்படி எந்தவொரு பொருளும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.

இதேபோன்று, டென்மார்க்கின் கோபன்ஹேகன் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் வந்த இரு விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சோஃபியா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மேலும், செக் குடியரசு, இத்தாலி, பெல்ஜியம் விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் தொடர்பாக எந்தவொரு துப்பும் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இரண்டாவது வாரமாக பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் ஐரோப்பாவில் விமான சேவை பாதிக்கப்பட்டது.