கொலுசு வாங்குவது போல் நடித்து களவாடிய ஜோடி – வைரலாகும் சி.சி.டி.வி!🔴

கொலுசு வாங்குவது போல் நடித்து கைவரிசை” – பெரிய கடை வீதி நகைக் கடையில் 58 கிராம் வெள்ளி நகையைத் திருடிய ஜோடி: சி.சி.டி.வி காட்சி வெளியீடு!

கோவையின் முக்கிய வர்த்தக மையமான பெரிய கடை வீதி பகுதியில் உள்ள நகைக் கடையில், வாடிக்கையாளர்கள் போல வந்து 58 கிராம் எடை உள்ள வெள்ளி கொலுசுகளை நைசாகத் திருடிச் சென்ற ஆண் மற்றும் பெண் ஜோடியின் சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கோவையின் பிஸியான வணிகப் பகுதியான பெரிய கடை வீதியில் அமைந்து உள்ள நகைக் கடை ஒன்றிற்கு, நடுத்தர வயதுடைய ஆணும், பெண்ணும் வாடிக்கையாளர்களைப் போல் இயல்பாக வந்து உள்ளனர். கடை உரிமையாளரிடம் தங்களுக்கு வெள்ளி கொலுசுகள் பார்க்க வேண்டும் எனக் கேட்டு உள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று உரிமையாளரும் பல்வேறு புதிய மாடல்களில் இருந்த வெள்ளி கொலுசு எடுத்து அவர்கள் முன் மேஜையில் பரப்பிவிட்டுப் பார்வையிடக் கூறி உள்ளார்.பார்வையிடுவது போல நடித்த அந்தப் பெண், உரிமையாளர் வேறு பக்கம் திரும்பிய நொடியில் மிகச் சாதுரியமாகச் செயல்பட்டு உள்ளார். தன் கையில் இருந்த 58 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசை யாருக்கும் தெரியாதவாறு நைசாக எடுத்துத் தனது கைப்பைக்குள் பத்திரமாக மறைத்து வைத்து உள்ளார்.இதற்கு இடையில், தங்களுக்குப் பிடித்தமான மாடல்கள் எதுவும் சரியாகவில்லை என்று தங்களின் நடிப்பைத் தொடர்ந்த இருவரும், கடையின் உரிமையாளரிடம் இயல்பாகச் சொல்லிவிட்டு எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி கடையை விட்டு வெளியேறிச் சென்று உள்ளனர்.
​

வாடிக்கையாளர்கள் சென்று விட்ட பின், நகைக் கடை உரிமையாளர் நகைகளை சரி பார்த்து உள்ளார். அப்போது 58 கிராம் எடை உள்ள வெள்ளி கொலுசு மட்டும் மாயமாகி இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.உடனே உஷாரான அவர், கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பின்னோக்கிப் பார்த்து உள்ளார். அதில், வாடிக்கையாளர் போர்வையில் வந்த அந்த ஆணும், பெண்ணும் கூட்டாக இணைந்து கடையின் உரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பி, கொலுசைத் துல்லியமாகத் திருடிச் சென்ற காட்சிகள் அத்தனையும் தெளிவாகப் பதிவாகி இருந்தது.தற்போது வெளியாகி உள்ள இந்தச் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களிலும், வணிக வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் சூழலைப் பயன்படுத்தி இதுபோன்று கைவரிசை காட்டும் மர்ம நபர்கள் குறித்துக் கடை உரிமையாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர்.