காமராஜர் காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்

மிழக அரசு பள்ளி மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்குத் தமிழக அரசு முக்கிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தொடங்கப்பட்டு, சுமார் 19.34 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.

தற்போது தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விரிவாக்கத்தின் மூலம் மேலும் 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயன்பெறுவர். மேலும், இத்திட்டத்தின் பெயர் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.343 கோடி செலவிடப்படவுள்ள நிலையில், நடப்பு 2026-27 நிதியாண்டிற்கு ரூ.217 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான உணவை வழங்கிட டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு பின்வரும் கடுமையான விதிகளையும் நிபந்தனைகளையும் விதித்துள்ளது. காலை 7:30 மணிக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் உணவு சுடச்சுடச் சென்றடைய வேண்டும். உணவு விநியோகம் செய்யப்படும் முறையானது சிறப்பு மொபைல் செயலி (Mobile App) மூலம் உடனுக்குடன் கண்காணிக்கப்படும். பள்ளித் தலைமை ஆசிரியரின் முறையான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே ஒப்பந்ததாரருக்கு மாதாந்திரக் கட்டணம் விடுவிக்கப்படும். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உணவின் தரம் உறுதி செய்யப்படும். மாணவர்களுக்குத் தரமான உணவு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.