தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதோடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விருதுநகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பயின்ற கே.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சர் விஜய் நேரில் கலந்து கொண்டு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைப்பதுடன், மக்களுடனான நேரடி சந்திப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









