தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
பொது பிரிவினருக்கு இணையவழியாக நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு பிரிவினருக்கு நேற்று நேரடியாகவும் நடைபெற்றது. பொது கலந்தாய்வு இணையதளம் வழியே நேற்று தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு பெறுவோர் ஆகியோருக்கு நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நேர்முக கலந்தாய்வில் விளையாட்டு பிரிவில் 15 இடங்கள் (13 எம்பிபிஎஸ், 2 பிடிஎஸ்), முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 11 இடங்கள் (10 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ்), மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பித்த 108 மாணவர்களுக்கும் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 614 இடங்களும் நிரப்பப்பட்டு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்வில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ”தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இந்த கலந்தாய்வில் மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் 51 வயதான வேதாரண்யத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கலந்துகொண்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பைத் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் குமார் கூறுகையில், ‘1992ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்த போது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக பட்ட படிப்பினை முடித்து விட்டு பார்மசி பணிக்கு சென்றேன். இப்போது எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு மதிப்பெண் மட்டும் போதும் என்பதாலும், வயது வரம்பு இல்லை என்பதாலும், நீட் தேர்வினை 2025ம் ஆண்டு எழுதினேன். ஆனால், தேர்ச்சி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, 2026ம் ஆண்டிற்கான நீட் தேர்வினை எழுதி தகுதிப் பெற்றுள்ளேன்’ என்றார்.
பொது கலந்தாய்வு www.tnmedicalselection.org என்ற இணையதளம் வழியே நேற்று தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி மாலை 5 மணி வரை தகுதியான மாணவர்கள், பொதுப் பிரிவில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்யலாம். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 20ம் தேதியும், அதனை உறுதி செய்த பின்னர் 21ம் தேதி இறுதி ஒதுக்கீடும் அளிக்கப்படும். ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் ஒதுக்கீடு ஆணைகளை பதவிறக்கம் செய்து கொள்ளும் மாணவர்கள், 23ம் தேதி முதல் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது..









