தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் 17 மாவட்டங்களை உள்ளடக்கி 5 பல வழித்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் ஊடகங்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 540 கிலோ மீட்டர் தூரத்திற்கான 5 பல வழித்தட ரயில்வே திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
அதன்படி, அரக்கோணம் – ரேணிகுண்டா இடையே 77 கிலோ மீட்டர் தொலைவிற்கு 3ஆவது மற்றும் 4ஆவது ரயில்வே வழித்தடம், ஓசூர் – ஓமலூர் இடையே இரட்டை வழிப்பாதை, சேலம் – கரூர் – திண்டுக்கல் வழித்தடத்தில் இரட்டை வழிப்பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாகக் கூறினார். இத்திட்டங்களுக்கு 10 ஆயிரத்து 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சென்னை – டெல்லி, சென்னை – மும்பை உள்ளிட்ட 7 ‘கோல்டன்’ வழித்தடங்கள் முழுமையாக 4 வழிப்பாதைகளாக மாற்றப்பட்டு வருவதாகக் கூறினார். புல்லட் ரயில்களை அடுத்தாண்டு மே – ஜூன் காலக்கட்டத்தில் சோதனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.







