அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினர் ரூ.190 கோடி நன்கொடையாக வழங்கி இருப்பது பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆய்வுப் படிப்புகளுக்காக விகாஸ் சின்கா – அனுராதா தம்பதியினர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.190 கோடி (20 மில்லியன் டாலர்) நிதியை நன்கொடையாக அளித்துள்ளனர்.
நன்கொடை வழங்கிய விகாஸ் சின்கா மற்றும் அனுராதா இருவரும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தாங்கள் படித்த கல்வி நிறுவனத்திற்குத் தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்த பெரும் தொகையை நன்றியுடன் ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், அந்த இந்தியத் தம்பதியின் பெயரிலேயே புதிய செயற்கை நுண்ணறிவு கல்லூரி ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடங்கிய இந்தத் தம்பதி, பின்னர் அமெரிக்கா சென்று மேற்படிப்புகளை முடித்து தற்போது அங்கேயே பணியாற்றி வருகின்றனர். மற்றவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இந்த உதவியைச் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.









