இந்திய உணவகங்கள், விரைவு விற்பனை மையங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினர் தீவிரச் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.இந்தச் சோதனைகளில் காலாவதியான பொருட்கள், போலியான லேபிள்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை கண்டறியப்பட்டுப் பல வணிக உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பை மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள கிடங்குகளில் நடத்தப்பட்ட சோதனையில், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருட்களில் காலாவதி தேதிகளை மாற்றி போலி லேபிள்கள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் குவிக்-காமர்ஸ் கிடங்குகள் மற்றும் முக்கிய உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கரப்பான் பூச்சிகள், எலிகளின் எச்சங்கள், அழுகிய காய்கறிகள் மற்றும் சமைக்கப் பயன்படும் அசுத்தமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் உத்திர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1,300 கிலோவிற்கும் அதிகமான கலப்படப் பன்னீர் மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மகாராஷ்டிரா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் பிரபல சர்வதேச உணவக சங்கிலித் தொடர் கிளைகளில் ஆய்வு நடத்தப்பட்டு, விதிகளை மீறிய 160-க்கும் மேற்பட்ட உணவகங்களின் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
சோதனை அமைப்புகளின் தரவுகளின்படி, இந்தியாவில் சோதிக்கப்படும் உணவு மாதிரிகளில் 20% வரை தரம் குறைந்தவையாகவோ அல்லது பாதுகாப்பற்றவையாகவோ இருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு இருப்பதை நுகர்வோர் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், பாக்கெட்டின் முன்பகுதியில் சிவப்பு நிற எச்சரிக்கை லேபிள் ஒட்டுவதை FSSAI கட்டாயமாக்கத் திட்டமிட்டு வருகிறது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு விதிகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தத் தீவிர நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.









