இந்தியாவில் தேர்தல்கள் வரும்போது பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளுமே இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசும். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கிடையே இந்தியாவை பின்பற்றி, அமெரிக்காவிலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 5000 டாலர் வழங்குவேன் என சொல்லி அதிரடி காட்டியிருக்கிறார் டிரம்ப். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடக்கும். அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகளில் மிட் டேர்ம் தேர்தல் என ஒன்று நடக்கும். இந்த தேர்தலின் முடிவுகள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டு எந்த கட்சியிடம் இருக்கும் என்பதை தீர்மானிக்கும். ஒருவேளை எதிர்க்கட்சி இந்த தேர்தலில் வென்றால் அதிபரால் தான் நினைத்த விஷயங்களை உடனடியாக செய்ய முடியாது. இதனால் இந்த தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல அதிபரின் செயல்பாடுகளுக்கு அமெரிக்க மக்களிடையே எப்படி வரவேற்பு உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள இது உதவும். டிரம்ப்பை பொறுத்தவரை இப்போது அவர் இக்கட்டான நிலையில் இருக்கிறார். ஈரான் போர், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என பல காரணங்களால் அமெரிக்க மக்கள் டிரம்ப் மீது கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.இந்தச் சூழலில் தான் இந்திய தேர்தல் அரசியலில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் இலவசங்களை ஒரு தேர்தல் வியூகமாக அவர் கையில் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் டிவிடெண்ட் தொகை வழங்கப்போவதாக என டிரம்ப் அறிவித்துள்ளார். நம்ம ஊரை போலவே வரும் நவம்பர் மிட் டேர்ம் தேர்தலில் அவரது கட்சியினர் வென்று நாடாளுமன்றத்தில் பலத்தை தக்கவைத்தால் மட்டுமே இந்தத் தொகை கிடைக்கும் என அவர் நம்ம ஊர் அரசியல்வாதியை போலவே வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.டல்லாஸில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு கட்சியின் மிட் டேர்ம் மாநாட்டில் சுமார் 100 நிமிடங்கள் உரையாற்றிய டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், 5,000 டாலர் தொகை எப்படி வழங்கப்படும், இதற்கான பட்ஜெட் எங்கிருந்து வரும், யார் இந்த பிராசஸை மேற்பார்வையிடுவார்கள் என்பது குறித்து தகவல்களை அவர் வழங்கவில்லை.
இந்திய தேர்தல் அரசியலை பொறுத்தவரை, வாக்காளர்களுக்கு இலவசங்கள் அல்லது நேரடி பண திட்டங்களை அறிவிப்பது புதிதல்ல. ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் இதுபோன்ற திட்டங்களை அறிவித்துள்ளன.முதன்முதலில் 1950 மற்றும் 1960களில் அப்போதைய தமிழக (சென்னை மாகாண) முதல்வர் காமராஜர் இலவச கல்வி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். 1967ல் திமுக நிறுவனர் சி.என். அண்ணாதுரை, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மானிய விலையில் அரிசி வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். இப்படி முதலில் மக்களுக்கு மிக பெரிய அளவில் உதவும் வகையில் இருந்த திட்டங்கள் பிறகு வாக்குகளை மட்டுமே குறிவைக்கும் வகையில் மாறி போனது.2006 தமிழ்நாடு தேர்தல் இலவச அரசியலில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக, இலவச கலர் டிவி பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்தது. 2011-ம் ஆண்டு திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப், திருமண உதவி உள்ளிட்ட பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்தன.இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மற்ற மாநிலங்களிலும் இதை பின்பற்ற ஆரம்பித்தனர். 2015 டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மானிய விலையில் மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தது.. அதன் பிறகு பல மாநிலங்களில் இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அரசியலின் ஒரு பகுதியாகின.
இந்த இலவசங்களால் சமூகத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நடந்துள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இவை மாநிலத்தின் நிதிநிலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மானியங்கள் மற்றும் இலவச திட்டங்களால் மாநில அரசுகளின் நிதிநிலையை மோசமாக மாறுகிறது. இதனால் அந்த மாநிலங்களால் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்க முடியாமல் போகிறது. ரிசர்வ் வங்கியே கூட பலமுறை இது குறித்து எச்சரித்துள்ளது.
இந்த சூழலில் தான் டிரம்ப்பும் இந்த இலவச அரசியலை கையில் எடுத்துள்ளார். அதேநேரம் அவர் இதுபோல சொல்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே அவர் வென்ற சமயத்தில் எலான் மஸ்க் தலைமையில் அரசு செலவை குறைக்க ஒரு குழுவை அமைத்தார். அதில் மிச்சமாகும் தொகை டிவிடெண்ட்டாக வழங்கப்புடம் என அறிவித்திருந்தார். அதேபோல உலக நாடுகள் மீது விதிக்கப்படும் வரிகளையும் டிவிடெண்ட்டாக தருவேன் என அறிவித்திருந்தார். அதுவும் எதிர்பார்த்தபடி செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







