பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’. பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் கிருத்தி சனோன், சைஃப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தி, தெலுங்கில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.
மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ‘ஆதிபுருஷ்’ படத்தில் வரும் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்த நெட்டிசன்கள் தங்களது கடுமையான விமர்சனங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே, சீதை குறித்து இத்திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்று, சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்தப் படத்தில், சீதையை ‘இந்தியாவின் மகள்’ என்று வர்ணித்துள்ளனர். இதற்கு நேபாள தலைநகர் காத்மாண்டுவின் மேயர் பலேந்திர ஷா தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் படத்தில் சீதையைக் குறிப்பிட்டு வரும் குறிப்பிட்ட வசனத்தை நீக்குமாறும் அவர் படக் குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு மூன்று நாட்கள் வரை படக் குழுவினருக்குக் கால அவகாசம் கொடுத்துள்ள பலேந்திர ஷா, இந்த விவகாரம் மற்ற இந்தி மொழிப் படங்களுக்கும் பிரச்னையாக அமையலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ‘ஆதிபுருஷ்’ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை மாற்றியமைக்கப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. பார்வையாளர்கள், ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரையும் ஒருங்கிணைக்கும் திரைப்பட அனுபவம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், ராமர், ராவணன், சீதை உள்ளிட்ட எந்த கதாபாத்திரங்களையும் சிறப்பான முறையில் வடிவமைக்கவில்லை என்ற விமர்சனங்கள் ஏற்கெனவே எழுந்துள்ளன.
கதையில் எந்த புதுமையையும் புகுத்தாமல் வெறும் பிரமாண்ட கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வரும் சூழலில், உலகம் முழுவதும் 2 நாளில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 64 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. வார இறுதி நாட்களில் சற்று கூடுதலாக வசூலை ஈட்டி இருக்கிறது ‘ஆதிபுருஷ்’. இந்த வார தொடக்கத்தில் ரூ.300 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சனங்கள் எழுந்தாலும் பிரபாஸின் ரசிகர்கள் படம் பிளாக்பஸ்டர் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.