3-ம் உலகப் போராக மூண்டுவிடக்கூடாது- புடினை எச்சரித்த ஜோ பைடன்.!!

நேட்டோவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் என்பதால், ரஷ்ய படைகளுடன் அமெரிக்கா சண்டையிடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்..

கடந்த 24-ம் தேதி அன்று, ரஷ்யப் படைகள் உக்ரைனில் சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்த தொடங்கின.. உக்ரைனின் பாதுகாப்பு தளங்கள், விமான நிலையங்கள், முக்கிய நகரங்களை குறித்து ரஷ்யா குண்டு மழைகளை பொழிந்தது.. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.. இதனால் உக்ரைன் – ரஷ்யா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது..

போரில் இரு தரப்பு ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.. மேலும் உக்ரைனுக்கு நிதி மற்றும் ராணுவ தளவாட உதவிகளை வழங்கி வருகின்றன..

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யாவை எச்சரித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் ” ஐரோப்பாவில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நின்று ஒரு தெளிவான செய்தியை அனுப்பப் போகிறோம். அமெரிக்காவின் முழு பலத்துடன் நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம்.. நேட்டோவை வலுப்படுத்துவோம். உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் போரிட மாட்டோம். நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போராக மாறும். எதையாவது தடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும், “என்று தெரிவித்தார்..

உக்ரைனில் ரஷ்யாவால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று பிடன் கூறினார். மேலும் ” ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோவை உடைத்து பலவீனப்படுத்துவதற்கான தனது முயற்சியில் தோல்வியடைந்தார். உக்ரைன் பிரச்சினையில் அமெரிக்க மக்களும் உலகமும் ஒன்றுபட்டுள்ளன.. நாங்கள் உக்ரைன் மக்களுடன் நிற்கிறோம். அமெரிக்காவும் நமது நட்பு நாடுகளும் பங்காளிகளும் புடின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கவும், உலக அரங்கில் ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..

ஒரு கேள்விக்கு பதிலளித்த பிடன், “நான் உளவுத்துறை விஷயங்கள் பற்றி பேசப் போவதில்லை. ஆனால் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்யா கடுமையான விலை கொடுக்க நேரிடும்,” என்றார்.