பூமிக்கு அடியில் 700 கி.மீ. ஆழத்தில் ஒரு பிரம்மாண்ட ரகசியப் பெருங்கடல் கண்டுபிடிப்பு.!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் மாபெரும் நீர்த்தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

நிலத்தடி கடல் என்று குறிப்பிடப்படும் இந்த பிரம்மாண்டமான நீர்த்தேக்கம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 700 கி.மீ. ஆழத்தில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மறைக்கப்பட்ட ஆனால் பரந்து விரிந்த நிலத்தடி கடல், ரிங்வுடைட் எனப்படும் ஒரு கனிமத்திற்குள், பூமியின் உருவாக்கம் மற்றும் நீரின் தோற்றம் பற்றிய புரிதலுக்கு பயன்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா முழுவதும் இருந்து 2000 நில அதிர்வு வரைபடங்களின் வரிசையைப் பயன்படுத்தி, 500க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களால் உருவாகும் நில அதிர்வு அலைகளை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாக ஆய்வு செய்தனர். இந்த அலைகள் பூமியின் உட்புறத்தை, குறிப்பாக மையப்பகுதியை கடந்து செல்லும்போது, கீழே உள்ள பாறைகளுக்குள் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரத்தை அளித்தன.

முன்னதாக, வால் நட்சத்திரத்தின் தாக்கங்கள் மூலம் பூமிக்குள நீர்த்தேக்கங்கள் இருக்கலாம் என்று கோட்பாடுகள் முன்வைத்தன. ஆனால், இப்போதைய கண்டுபிடிப்பு ஒரு மாற்று கோட்பாட்டை யோசிக்க வைக்கிறது. பூமியின் பெருங்கடல்கள் அதன் ஆழமான மையப்பகுதிக்குள் தோன்றியிருக்கலாம், படிப்படியாக பல யுகங்களைக் கடந்து அவை வெளியேறி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள ஆய்வாளர் ஸ்டீவன் ஜேக்கப்சன், “இந்த நிலத்தடி நீர்த்தேக்கம் இல்லாவிட்டால், பூமியின் நீர் முழுவதும் அதன் மேற்பரப்பில் மட்டுமே இருக்கும். அப்போது, மலைச் சிகரங்களை மட்டுமே காணமுடியும்” என்று கூறுகிறார்.

மேலும், இந்தக் கண்டுபிடிப்பு பூமியில் நீர் சுழற்சி பற்றிய நமது புரிதலை மறுவரையறை செய்யும் வாய்ப்பு கொண்டுள்ளது எனவும் அவர் எடுத்துரைக்கிறார்.