இனி பிறப்பு சான்றிதழில் இது கட்டாயம் – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.!!

குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி, இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பு பதிவு ஆவணத்தில் பதிவான நிலையில், பிறப்பு பதிவுக்கான படிவம் 1-ல் சில திருத்தங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, குழந்தையின் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டு அதன் நேரெதிரில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கும். குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் இது பொருந்தும்.

பிறப்பைப் பதிவு செய்யும் ஆவணத்தில் குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் இது முழுக்க முழுக்க புள்ளிவிவரத்துக்கானது என்று கூறப்படுகிறது. பிறப்புப் பதிவேட்டில் சட்ட தகவல், புள்ளிவிவர தகவல் என இருவேறு தகவல்கள் அமைந்திருக்கும். அதில் பெற்றோரின் மதம் என்பது புள்ளிவிவர தகவலுக்காகவே பெறப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக பார்த்தால் பிறப்புப் பதிவேட்டில் இனி பெற்றோரின் ஆதார் எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி இருப்பின் அதையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முகவரிப் பெட்டியில் மாநிலம், மாவட்டம், டவுன் அல்லது கிராமம், வார்டு எண், பின்கோடு ஆகியன சேர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.