மருதமலை முருகன் கோவிலில் உண்டியல் மூலம் 61 லட்சம் வசூல்- 151 கிராம் தங்கம், 1855 கிராம் வெள்ளி காணிக்கை இருந்தது..!!

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது பக்தர்களால் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன் படி நேற்று மருதமலை கோவிலில் உள்ள 11 பொது உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. மருதமலை கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி, மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் பாரதியார் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் உழவாரப்பணி பக்தர்கள் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர் .உண்டியல் காணிக்கையாக ரூ.61 லட்சத்து 53 ஆயிரத்து, 458 இருந்தது. மேலும் 151 கிராம் தங்கம், 1855 கிராம் வெள்ளி இருந்தது.