குடிபோதையில் தகராறு : பெயிண்டர் அடித்துக் கொலை- நண்பருக்கு போலீஸ் வலை..!

கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பா ளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று கனகராஜூம், அவரது நண்பரான புளியம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிசீயனான வெங்கடேஷ் (31) ஆகியோர் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள லாரி அசோசியேசன் சங்க அலுவலகம் முன்பு அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர். அப்போது வெங்கடேஷ் தனது செல்போன் மற்றும் பணத்தை காணவில்லை என கனகராஜிடம் தகராறு செய்தார்.

அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் அங்கு கிடந்த செங்கலை எடுத்து கனகராஜின் தலையில் அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து வெங்கடேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கனகராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கனகராஜை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த வெங்கடேஷை தேடி வருகிறார்கள்.