2022ம் ஆண்டுக்கான முப்பெரும் விழா: விருதுகள் பெறுவோரின் பெயர்கள் அறிவிப்பு..!

சென்னை: விருதுநகரில் செப்டம்பர் 15ல் நடக்கும் நிகழ்ச்சியில் 2022ம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுபவர்களின் பெயர்களை திமுக அறிவித்துள்ளது.

திமுகவின் தாய் கழகமான திராவிட கழகத்தை நிறுவியவர் பெரியார். திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது. திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முப்பெரும் விழாவைத் தொடங்கி நடத்தினார். இந்த ஆண்டும் முப்பெரும் விழா கொண்டாடப்பட உள்ளது.

திமுகவின் முக்கிய விழாக்களில் ஒன்றாக இருக்கும் இதில், தமிழ் அறிஞர்கள், தமிழ் சமூகத்திற்கு தொண்டாற்றியவர்கள் ஆகியோர் கவுரவிக்கப்படுவார்கள். இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருது வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் முப்பெரும் விழாவில் விருது பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பெரியார் விருது – சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருது – கோவை இரா.மோகனுக்கு வழங்கப்படுகிறது. இதுபோல் கலைஞர் விருது – திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் விருது – புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருது குன்னுர் சீனிவாசனுக்கு 15ம் தேதி வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.