ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை… மீண்டும் அண்ணாமலையின் குற்றச்சாட்டு தான் காரணமா..?

பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜி ஸ்கொயர் என்னும் பிரபல கட்டுமான நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் செய்து வரும் இந்நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனிடையே, ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் பரபரப்பு குற்றம்சாட்டினார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், திமுக அரசு இந்நிறுவனத்திற்கு சாதகமான வேலைகளை சட்டவிரோதமாக செய்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அந்நிறுவனம், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வியாபாரம் செய்து வருவதாகவும், தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் கூறியிருந்ததது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துபட்டு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

ஜி ஸ்கொயர் நிறுவனம் கோவை L&T புறவழிச் சாலையில் நில விற்பனை செய்து வருவதும் சிங்காநல்லூர் போன்ற இடங்களில் வீட்டுமனைகள் விற்பனை செய்ய பணிகள் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.