11-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து பலாத்காரம்- கூலித்தொழிலாளி போக்சோவில் கைது..!

கோவை சிறுமுகை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி.
11-ம் வகுப்பு மாணவி இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கவுதம்(வயது19).கூலித்தொழிலாளி.
பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் கடந்த ஒரு வருடமாக
ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

சம்பவத்தன்று மாணவியை கவுதம் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.
மாணவியும் அங்கு சென்றார். அப்போது அவரை அழைத்து கொண்டு கவுதம் அந்த
பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு வைத்து மாணவியை திருமணம்
செய்தார். பின்னர் தனது பெற்றோரிடம் சிறுமியை மேஜர் என கூறி அங்கு
வசித்தார். அப்போது பல முறை மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்
மாணவியை பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மேலும் மாணவி மைனர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர் சம்பவம் குறித்து சிறுமுகை போலீசில் புகார்
கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  கவுதம் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் கவுதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.