காஞ்சிபுரத்தில் 1071 வருட பழமையான பெருமாள் கோவிலை காணவில்லை- பொன்.மாணிக்கவேல் புகார்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் “காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தம்பாடி அடுத்த திருமால்புரத்தில் இருந்த கிபி.1071ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான நின்றருளிய பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயிலை காணவில்லை” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “காஞ்சிபுரம் அருகே ஒரு பெருமாள் கோயில் திருடப்பட்டு நம் மண்ணிலிருந்து காணாமல் போய் உள்ளது. பராந்தக சோழன் காலத்தில் கிபி.1071ம் ஆண்டு கட்டப்பட்ட நின்றருளிய பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை வழிபாட்டில் இருந்துள்ளது.

பின்னர் அந்தக் கோயில் சீரமைக்கும் பணி என்ற பெயரில் முற்றிலும் களவாடப்பட்டுள்ளது. இந்த கோயில் தொடர்பான கல்வெட்டு பதிவுகள் 115 ஆண்டுகளுக்கு முன்பே 1906 ஆம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணி என்ற பெயரில் இந்த கோயிலில் இருந்து கல்வெட்டுகள், சிலைகள் என அனைத்தும் வெளியே கொண்டு செல்லப்பட்டு பிறகு திரும்ப எடுத்து வரப்படவில்லை.

இதற்கு சாட்சியாக 80 முதல் 90 வயது நிறைந்த பெரியவர்கள் இருக்கின்றனர். திருப்பணி என்ற பெயரில் கோயில் திருடப்பட்டதை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு தெரிவிக்காமல் இருந்தது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இந்த புகாரின் அடிப்படையில் சிலை திருட்டு தடுப்பு ஏ.டி.ஜி.பி மற்றும் டி.ஜி.பி அளவிலான அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.