கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 100-சதவீதம் மழை:வேளாண் காலநிலை ஆய்வு மையம் தகவல்..!

தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில், 100-சதவீதத்திற்கு மேல் பொழிந்து உள்ளதாக, வேளாண் காலநிலை ஆய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 38-நாட்களில் பல மாவட்டங்களில், 100-சதவீதத்துக்கும் அதிகமாக பெய்துள்ளதாகவும், ஒரு சில மாவட்டங்களில் மழைப்பொழிவு பொய்த்துள்ளதாகவும், வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:

கடந்த ஜூன் 1 முதல், நேற்று வரை, கன்னியாகுமரி, நாகை, காரைக்கால், தென்காசி, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைப்பொழிவு மிகவும் குறைவாகப் பதிவாகியுள்ளது. கரூர், திருச்சி, பெரம்பலூர், சென்னை, திருப்பூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, திருவள்ளூர், சிவகங்கை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், 100சதவீதத்துக்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக, 270சதவீதம் அளவுக்கு பதிவாகியுள்ளது.

ஜூலை 15-க்கு பின், பருவமழை தீவிரமடையும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஜூன் மாதத்தில், 9-மி.மீ., வரை மழைப்பொழிவு பதிவானது. அதன்பின், ஒட்டுமொத்தமாக, 30-மி.மீ.வரை கிடைத்துள்ளது. தென்மேற்கு பருவமழையால், கோவை மாவட்டத்தில் 210-மி.மீ.வரை மழை கிடைக்கும். வரும் மாதங்களில், 180மி.மீ. வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் எதிர்பார்த்த மழைப்பொழிவு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.