கோவை வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, பணம் கொள்ளை- அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு..

கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் ஜெமினி நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அப்துல் வகாப் .இவரது மகன் ஷாஜகான் (வயது 40) செருப்பு கடை,செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உக்கடம் கரும்புக் கடையிலும் சொந்த வீடு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்ஜான் என்பதால் ஷாஜகான் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கரும்புக்கடை வீட்டுக்கு வந்தார் .பண்டிகை முடித்துவிட்டு நேற்று குடும்பத்துடன் டீச்சர்ஸ் காலனி சென்றார். அப்போது அவரது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்து துணிமணிகள் கீழே சிதறி கிடந்தன .அதற்குள் இருந்த 10 பவுன் நகைகள் ரூ 3. லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர் . போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தனது வீட்டில் மற்றொரு இடத்தில் 47 பவன் நகைகளை ஒரு பையில் சுத்தி வைத்திருந்ததால் அந்த நகைகள் தப்பியது. இதற்கிடையே வீட்டில் நகை, பணம் கொள்ளை தொடர்பாக ஈரேரட்டில் உள்ள அவரது தாய் நூர்ஜகானுக்கு ( வயது 75) தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் அங்கிருந்து கோவை வருவதற்காக ஈரோடு பஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென்று. மயங்கி விழுந்தார் .உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார்.இது குறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் வீட்டில் கொள்ளை நடந்த அதிர்ச்சியில் தாய் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.