மேட்டூர் அணையில் 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு:11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

சேலம்: சேலம் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக 11 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்காமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கர்நாடக தலைநகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதேபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கபினி, கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பியுள்ளன.

அங்கிருந்து காவிரியில் அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர தொடங்கி வேகமாக நிரம்பியது. தற்போது அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதன் காரணாக அணைகளில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் இது இன்று காலை 8 மணிக்கு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த அளவு இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் அதிகளவு நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அதன்படி 23 ஆயிரம் கனஅடி நீர் மின்நிலையங்கள் வழியாகவும், 67 ஆயிரம்கனஅடி நீர் 16 கண் மதகுகள் வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேறுகிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் திறப்பானது 1.25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தமிழக அரசு நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவிரி கரையோரத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிக்க, துணிதுவைக்க, செல்பி எடுக்க யாரும் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஆண்டில் 4வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் நீர் தறிக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதோடு, போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் தேனி மாவட்டம் வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் இன்று காலை 70.01 அடியாக இருந்து. அணைக்கு உள்ளே வினாடிக்கு 3,414 கனஅடி நீர் வரும் நிலையில் பாதுகாப்பு கருதி 3,703 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் தென்பெண்ணை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் தண்ணீரில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.