திமுக vs அதிமுக!! தொடர் மோதல்… வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைத்ததில் எஸ்.பி.வேலுமணி ஊழல் முறைகேடு-பரபர கோவை..!!

கோவை மாவட்டம் வெள்ளலூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை இடம் மாற்றப்போவதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு திமுக – அதிமுக இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது.

கோவை மாவட்டம் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.168 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தத் திட்டத்திற்கான செலவை மாநில அரசும் கோவை மாநகராட்சியும் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.

கொரோனா பெருந்தொற்றால் வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொய்வுற்றன. இந்த நிலையில் தான் வெள்ளலூரில் அமையும் பேருந்து நிலையம் இடமாற்றப்படுவதாக செய்திகள் வெளியானது.

இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான தனியார் ரியஸ் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கோவையில் பல்வேறு இடங்களில் நிலங்களை வாங்கி வருகிறது.

அந்த நிறுவனத்துக்கு சாதகமாக வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு வேறு இடத்திற்கு மாற்றி அதன் நில மதிப்பை உயர்த்த திமுக அரசு முயற்சிக்கிறது.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றும் முடிவை கைவிடவில்லையென்றால் அதிமுக தொடர் உண்ணாவிரத போராட்டமும், தேவைப்பட்டால் சட்ட போராட்டமும் நடத்தும்,” என்றார்.

வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசின் ரைட்ஸ் அமைப்பு ஆய்வு நடத்தி வருவதாகவும் ஆய்வு அறிக்கை கிடைத்தபிறகு தான் முடிவெடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், “அதிமுக ஆட்சியில் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றிருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்பு உள்ளது. எனவே இந்த முறைகேடுகளை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும்,” என திமுகவைச் சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில், “முன்னாள் அமைச்சர் வேலுமணி இதற்கான பணிகளுக்கு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மற்றும் தன்னுடைய பினாமிகளுக்கு ஆதரவாக டெண்டர் வழங்கியுள்ளார்.

வெள்ளலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவருடைய பினாமிகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை முறைகேடு செய்து வாங்கியுள்ளனர்,” என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியவர், “வெள்ளலூர் பேருந்து நிலையத்தின் பின்புறமே குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. குப்பைக் கிடங்கு அங்கிருந்து மாறுவதாக தெரியவில்லை. அதை ஒட்டியேதான் பேருந்து நிலையம் அமைத்துள்ளனர். இதற்காக விடப்பட்ட ரூ.168 கோடி டெண்டர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவருடைய பினாமிகளுக்கே வழங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்தைச் சுற்றி அமைச்சர் வேலுமணி தன் பினாமிகள் மூலமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியுள்ளனர். இதிலும் பல முறைகேடு நடந்துள்ளது. இதற்குப் பல அரசு அதிகாரிகளும் துணை போய் உள்ளனர்.

எனவே இந்த முறைகேடுகளை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும். அதனால்தான் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளேன்,” என்றார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன். பிபிசி தமிழிடம் பேசியவர், ”திமுக அரசு தன்னுடைய நிர்வாக செயலின்மையை திசை திருப்புவதில் வல்லவர்கள். அதனால் அவ்வப்போது இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

தங்களுடைய சுய நலத்திற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட அரசு திட்டத்தை முடக்கப் பார்த்தார்கள். அதற்கு அதிமுக கடும் எதிர்வினையாற்றியுள்ளது. இது மக்களிடத்திலும் பதிவாகியுள்ளது. மக்களும் இந்த முடிவை எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதிமுகவுக்கு கிடைக்கும் வரவேற்பு பொறுக்காமல்தான் இது போன்ற அவதூறு புகார்களைச் சொல்லி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை பல பொய் வழக்குகளை தொடுத்துள்ளது. இரண்டு முறை ரெய்டும் நடத்தியுள்ளார்கள். அப்போதெல்லாம் கிடைக்காத முறைகேடு ஆவணங்களா தற்போது கிடைத்துவிடும். திமுக அரசின் திசை திருப்பும் முயற்சிகளில் ஒன்று தான் இதுவும்” என்றார்.