பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது – தாலிபான்கள் உறுதி..!

காபூல்: பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்..

இது தொடர்பான ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது.

தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.. தங்கள் தடை உத்தரவுக்கு சர்வதேச அரங்கில் கடும் எதிர்ப்பு வந்துள்ள நிலையில், தடைக்கான காரணம் குறித்து தாலிபான் விளக்கம் அளித்திருந்தது.

“படிக்கப்போகும் மாணவிகள், கல்யாணத்துக்கு போவதுபோல், டிரஸ் அணிந்து போவதால்தான், இவ்வாறாக தடை செய்தோம்” என்ற விளக்கத்தை தந்தனர்.ஆனால், இந்த விளக்கத்தை கண்டு, ஆப்கன் பெண்கள் மேலும் கொந்தளித்து விட்டார்கள். இந்த ஒன்றரை வருட காலமாகவே, ஆப்கன்கள் பெண்களுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு வந்தபோதிலும், இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பெண்கள், ஆவேசம் அடைந்துள்ளனர். தாலிபன் அரசின் இந்த முடிவை எதிர்த்து மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

நங்கர்ஹார் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் இறங்கி உள்ளனர். உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் ஹெராத் நகரில் கல்வி எங்களின் உரிமை” என்று முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தி வருகிறார்கள் பெண்கள். இந்த பெண்களின் எழுச்சியை கண்ட ஆப்கன் மாணவர்களும் அப்பெண்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், தங்களுடைய வகுப்புகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட துவங்கி உள்ளனர். பெண்களை மறுபடியும் கல்லூரிகளில், பல்கலையில் அனுமதிக்கப்படும்வரை, தாங்களும் வகுப்புகளுக்குள் செல்ல மாட்டோம் என்று மாணவர்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்துள்ளனர்.

மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களை மூடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுக்களை ஆப்கன் அரசு அமைத்துள்ளதாகவும் தெரிகிறது. இவ்வாறாக தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டுவரும் நிலையில், பெண்கள் தங்கள் சிகிச்சைக்காக, ஆண் டாக்டரை அணுகக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் டாக்டர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட நேரத்தில்தான், பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், “பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை ரத்து செய்வது குழுவிற்கு முன்னுரிமை இல்லை. இஸ்லாமிய சட்டத்தை மீறும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம். மேலும் பெண்கள் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்த கவலைகள் நாட்டில் நிறுவப்பட்ட குழுவின் விதிகளின்படி கையாளப்படும்.

இஸ்லாமிய எமிரேட் அனைத்து விஷயங்களையும் இஸ்லாமிய ஷரியாவின்படி ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறது. மேலும் நாட்டில் ஷரியாவுக்கு எதிராக செயல்படுவதை ஆளும் அரசாங்கம் அனுமதிக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் உள்ள மதக்கோரிக்கைகளைப் புரிந்து கொள்ளவும், மனிதாபிமான உதவிகளை அரசியலுடன் பிணைப்பதை தவிர்க்கவும் ஆப்கானிஸ்தானின் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச உதவி அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையானது, ஆப்கன் பெண்களுக்கு மேலும் கலக்கத்தை தந்து வருகிறது.