கோவை சொகுசு மோட்டார் சைக்கிள் ஷோரூமில் திடீர் தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பைக்குகள் எரிந்து நாசம்..!

கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகில் பிரபல சொகுசு மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் இருந்து இன்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஷோரூமில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை வீரர்கள் பார்த்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக ஷோரூமில் தீப்பிடித்து எரிதது தெரியவந்தது. இந்த தீவிபத்தில் அங்கிருந்த 7 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.