ஆட்சியை இழந்த சிவசேனாவின் எதிர்காலம் என்ன..? அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன… ஒரு பார்வை…

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிக்கவிழ்ப்பு சுமுகமாக நடந்தேறியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இனி சிவசேனாவின் எதிர்காலம் என்ன? சிவசேனா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

 சிவசேனாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஏக்நாத் ஷிண்டே முதல்வராகிவிட்டார். அவர் வெற்றிகரமாக முதல்வர் பதவியைப் பெற்றார் என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டுமா இல்லை பாஜக ஷிண்டே குழுவுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு அதை தன் கைப்பாவையாக வைத்திருக்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்தப் பின்னணியில் நாம் சிவசேனாவின் எதிர்காலத்தை அணுகுவோம். இதற்கு சிவசேனாவின் வளர்ச்சியில் தொடங்கி தற்போதைய நிலைமை வரை நாம் தீர அலசிப்பார்ப்போம்.

சிவசேனா கட்சி மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தான் பெற்றது. கடந்த காலங்களில் இருந்து ஒப்பிட்டுப் பார்க்கும்போதும் சிவசேனாவின் தேர்தல் அரசியல் சீராகவே இருந்துள்ளது. சிவசேனாவின் வாக்குவங்கி 15%க்கும் கீழ் குறைந்ததே இல்லை. அதேவேளையில் 20%த்தையும் தாண்டியது இல்லை. இதனால் சிவசேனாவிற்கு மக்களின் ஆதரவு மாநிலத்தில் சீராக இருப்பது தெரிகிறது.

 ஆனால் அதேவேளையில் 2019 மக்களவை தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக உள்ளன. சிவசேனா, 2014, 2019 தேர்தல்களில் தலா 18 மக்களவை தொகுதிகளில் வென்றுள்ளது. 2014ல் பதிவான வாக்குவங்கியைவிட சிவசேனாவுக்கு 2014ல் சற்று அதிகமான வாக்குவங்கியே கிடைத்தது.

 சட்டப்பேரவை தேர்தல், 2019 மக்களவை தேர்தல் வெற்றிகளை சுயேச்சைகளின் ஆதரவால் கிடைத்த வெற்றி என்று சிவசேனா தவறாகப் புரிந்து கொண்டதோ என்ற ஐயமும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். சிவசேனாவின் வெற்றிக்கு பாஜக கூட்டணி மிகப்பெரிய காரணம் என்பதை சேனா தலைவர்கள் உணரத் தவறிவிட்டார்களோ என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்புகின்றனர். 2014 மக்களவை தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்றது. அதற்கு அடுத்துவந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முறித்து சிவசேனா தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் சிவசேனாவின் சாகசத்துக்கு நல்ல பதில் கிடைக்கவில்லை. பாஜகவைவிட குறைவான வாக்குகளைப் பெற்றது. அதனால் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் சிவசேனா இடம்பெற்றது. 288 சட்டப்பேவரை தொகுதிகளில் மகாராஷ்டிரா 256 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜகவும், சிவசேனாவும் மோதின. 54 தொகுதிகளில் தான் பாஜக, சிவசேனா முதல் இரண்டு இடங்களில் இருந்தன. அதிலும் 32ல் பாஜகவும், 22ல் சிவசேனாவும் முன்னிலை வகித்தன. மாநிலத்தில் வலதுசாரி இயக்கத்துக்கே அதிக ஆதரவு இருக்கிறது என்பதை அந்த தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்தின.

 மேலே உள்ள தேர்தல் கணக்குகளைப் பார்க்கும்போதும், ஏக்நாத் ஷிண்டேவின் பாஜகவுடனான கூட்டணி அவருக்கு முதல்வர் பதவியைப் பெற்றுக் கொடுத்ததைப் பார்க்கும்போதும், பாஜகவுடன் இணைவதுதான் சிவசேனாவுக்கு சிறந்த எதிர்காலமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், 2019ல் ஏன் சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஏற்றுக்கொள்ள பாஜக ஒப்புக்கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு, பாஜக சிவசேனாவில் இருந்து சற்றே வளைந்து கொடுக்கும் ஒருவரையே முதல்வராக விரும்பியது என்றும் உத்தவ் தாக்கரே போன்ற அதிகாரமிக்க தாக்கரே குடும்பத்தினரை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், உத்தவ் தாக்கரேவோ மராட்டிய பெருமை, மண்ணின் மைந்தர் அடையாளங்களை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முயல்கிறார். மகாராஷ்டிரா மக்கள் தொகையை அலசும்போது 1961ல் 43% ஆக இருந்த மராட்டிய சமூகத்தினரின் எண்ணிக்கை, 2011ல் 35 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் அங்கு மண்ணின் மைந்தர் கொள்கையைவிட, வலதுசாரி கொள்கையே அதிகமாக ஓங்கி ஒலிக்கிறது.

பழையநிலை மாறிவிட்டதால் இன்னமும் மராட்டிய பெருமை பேசி சிவசேனா அரசியல் செய்ய முடியாது எனக் கூறப்படுகிறது. இல்லை, உத்தவ் தாக்கரே, வலதுசாரியல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தன்னை நிரூபிக்கலாம். ஆனால் மகா விகாஸ் அகதியுடன் அவர் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் மதச்சார்பற்ற கட்சிகளுடனான கூட்டணியையும் சிவசேனா மறுசீராய்வு செய்ய வேண்டும். இந்துத்துவாவை எதிர்க்க பல உத்திகளையும் வகுக்க வேண்டியிருக்கும். சில சமரசங்களையும் செய்ய வேண்டியிருக்கும். இதுதான் சிவசேனாவின் எதிர்காலம்.