மதிப்பு கூட்டு வரி வசூல், விரைவில் சமாதான் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் – கோவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!!

தமிழகத்தில் நிலுவையில் உள்ள மதிப்பு கூட்டு வரி (வாட்) தொகையை வசூலிக்க உதவும் நோக்கத்துடன் “சமாதான்” திட்டத்தை, இரண்டு அல்லது மூன்று வாரங்களில், மாநில அரசு அறிவிக்கும், என கோவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (CII) சார்பில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோவை பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் கலந்துரையாடினார்.
கலந்துரையாடலின் போது, தொழில் துறையினர் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக ஜி.எஸ்.டி குறித்து தொழில் அமைப்பினர் நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். சமீபத்தில், உள்ள மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் ஜி.எஸ்.டி வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, வரியை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.

ஏற்கனவே, மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு இடையே, தற்போதைய ஜி.எஸ்.டி வரி அதிகரிப்பு, கடுமையமாக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். இதே போல, கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோரும் அவரவர் தொழில்களுக்கு, ஜி.எஸ்.டியால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தொழில் முனைவோர் மத்தியில்பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும்,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உயர் கல்வி துறையில் தொழில் சார்ந்த படிப்புகள் வழங்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவற்றை நிரப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக, தெரிவித்தார். தேசிய சராசரியை விட தமிழகத்தில் உயர்கல்வி பயில சேரும் மாணவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. ஆனால், அது மட்டுமே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தராது. மாணவர்களை திறன் மிக்கவர்களாக மாற்றுவது அவசியம் என்பதால், ஐடிஐ-க்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களை வேலைக்கு தயார்படுத்தும் வகையில், அனைத்து உயர்கல்வி நிலைகளிலும் தொழில்நுட்பக் கல்வியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், என்றார். ஜி.எஸ்.டி. சேவை மையத்தில்தமிழ் உள்ளிட்டமாநில மொழிகளில் ஆலோசனை வழங்க மத்திய அரசிடம்கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்த அவர்,மதுரையில் அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார்.

தற்போது, 100 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி குறித்து மதுரை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் இது தவிர தொழில்துறையினரின்கோரிக்கைகளும் அந்த கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று உறுதியளித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு, நிதி ஆதாரம் மற்றும் தொழிலாளர்கள் – இவை இரண்டும் இன்றியமையாதவை ஆகும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள்சென்று சேராததால், 80 சதவீத நிதி முழுமையாக தொழில் முனைவோரை சென்றடைவதில்லை, என்றார்.

ஜி.எஸ்.டி.யில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்த நிதி அமைச்சர், தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தொழில் நிறுவனங்கள் அருகே தங்கும் விடுதிகள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அடுத்த கட்டமாக தனியார் பங்களிப்புடன், மேலும் விடுதிகள் விரிவுபடுத்தப்படும், எனவும் தெரிவித்தார். ஜூலை 1ம் தேதி முதல் புதிய ஊழியர்கள் சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டத்தின் படி, ஒருவரின் மொத்த ஊதியத்தில் 50 சதவிதம் அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும். அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவிதம் வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. தற்போது ஒருவரின் மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என்றால், அவரின் அடிப்படை சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கும் இந்த 15 ஆயிரத்திற்கு 12 சதவிதம் என்ற அளவில் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. புதிய சட்டம் அமலுக்கு வந்தால் 50 ஆயிரத்தில், அடிப்படை சம்பளம் என்பது 25 ஆயிரமாக மாறிவிடும். 25 ஆயிரம் ரூபாய்க்கு 12 சதவிதம் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும். இதனால் மாத சம்பளம் குறையும் ..