வர்ணத்தையும் , ஜாதியையும் நாம் முற்றிலுமாக நிராகரிக்க பட வேண்டும்- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு..!

நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “வர்ணம், ஜாதி போன்ற கருத்தியல்களை நாம் முற்றிலும் தவிர்க்கவேண்டும்” என கூறியுள்ளார். மேலும் தற்போது உள்ள நிலையில், சாதிகள் மற்றும் வர்ணங்கள் போன்றவை இப்போது தேவையில்லை” என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமூகத்தில் அனைவரும் சமம் என்பதே இந்திய கலாச்சாரத்தில் இருந்தது. ஆனால் அதை மறந்ததே நமக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது” என கூறினார்.

மேலும், “வர்ணாசரமத்திலும், சாதிகளிலும் எந்த பாகுபாடுகளும் தொடக்கத்தில் இருக்கவில்லை. இனி யாராவது வந்து இந்த கருத்தியல்களை பற்றி கேட்டால், அது முடிந்துவிட்ட ஒன்று, அதை பற்றி இனி மறந்துவிடலாம் என்று கூறுங்கள்” என்று பேசினார்.

தொடர்ந்து, “பாகுபாடுகள் உள்ள அனைத்தையும் நாம் வைத்துக்கொள்ளாமல் வெளியேற்ற வேண்டும். நம் முன்னோர்கள் தவறுகளை செய்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் இது நடந்துள்ளது. நாம் நம் முன்னோர்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்வதால் அவர்களை சிறுமைபடுத்துகிறோம் என்று ஆகிவிடாது. உலகில் அனைவரும் தவறு செய்துள்ளார்கள். இந்தியர்கள் மட்டும் விதிவிலக்கில்லை” என கூறினார்.