கோவையில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறிப்பு: மடக்கி பிடித்தபோது மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற திருடர்கள்..!

கோவை உக்கடம் புல்லுகாடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கபீர் (வயது 36). வீடியோகிராப்பர். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்து காந்திபுரம் 7-வது வீதியில் நடந்து வந்தார்.

அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கபீர் அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கபீர் சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு கபீரின் செல்போனுடன் தப்பி சென்றனர்.
கபீர் செல்போன் திருடர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டுக்கு சென்றார். பின்னர் அவரது செல்போன் எண்ணுக்கு அழைத்தார். அழைப்பை எடுத்த திருடர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை காந்திபுரம் பஸ் நிலையம் வந்து கொடுத்துவிட்டு செல்போனை பெற்று கொள்ள கூறினர்.

கபீர் மோட்டார் சைக்கிளை எடுத்து காந்திபுரம் சென்று திருடர்களை தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் அங்கு வரவில்லை. இதையடுத்து கபீர் மோட்டார் சைக்கிளை காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்து நடந்தவற்றை கூறி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற அந்த மர்ம நபர்கள் யார் என அந்த மோட்டார் சைக்கிளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.