மாயா குளத்தில் கிராம சபை கூட்டம்..!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சி முத்துராஜ் நகரில்
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு  மாயா குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சக்தி கணேஷ் செயலர் ஜெயபால் முன்னிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்ந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளை செயலர் ஜெயபால் வாசித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதாக சொல்லி மாயா குளம் பள்ளிவாசல் பகுதிக்கு குடிநீர் வழங்காமல் புறக்கணிப்பது ஏன் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.
அதே போன்று கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் வைத்து இன்று வரை நிறைவேற்றப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. கவுன்சிலர் துப்புரவு சம்பந்தமாக கேள்வி எழுப்பும் பொழுது ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சக்தி கணேஷ் கவுன்சிலரை இடைமறித்து நீங்கள் எதற்கு இருக்கிறீர்கள் பேசாதீர்கள் என்று கூறினார். உடனே கவுன்சிலர் கிராம சபை கூட்டத்தில் நான் பேசாமல் யார் பேச வேண்டும் எதற்கு இந்த கிராமசபை என்று கேள்விகள் எழுப்பினார். அப்பொழுது கிராம மக்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து முறையாக அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று மன்ற தலைவர் எடுத்துக் கூறினார். பின்பு வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு முறையாக ஊராட்சியில் பதிவு செய்து அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிதண்ணீர் சாலை சீரமைத்தல் தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்துதல் அடிக்கடி மின்சார தடை போன்ற அடிப்படைத் தேவைகள் விவாதிக்கப்பட்டது. மேலும் தெருவிளக்கு விரிவாக்கத்திற்கு மதிப்பீடு செய்து உத்திரகோசமங்கை மின்வாரியத்துறைக்கும் கீழக்கரை மின்வாரியத்துறைக்கும் அனுப்பப்பட்டு இன்று வரை இழுத்தடிப்பு செய்கின்றனர். ஆகையால் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர். மாயா குளம் பகுதியில் சுற்றி சிசிடிவி கேமரா அமைப்பதற்கு எட்டு இடங்களை தேர்வு செய்து தீர்மானமாக நிறைவேற்றி வட்டார வளர்ச்சி துறைக்கு அனுப்பப்பட்டு இன்றுவரை ஒப்புதல் அளிக்காமல் தாமதிப்பதால் உடனே அதை சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.