திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்..!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனா். பொது தரிசனம், ரூ. 100 கட்டணப்பாதையில் பல மணி நேரம் காத்திருந்ததால் திருக்கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரூ.100 கட்டணப்பாதையானது கோயில் வளாகத்தில் தொடங்கி சன்னதித் தெரு வரையில் நீண்டது.
திருச்செந்தூா் கோயிலில் தற்போது பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருவதால், கோயில் வளாகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனால் ரத வீதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தா்கள் கோயிலுக்கு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரத வீதிகளில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் பக்தா்கள் வாகனங்களை நிறுத்துவதால், அந்த வாகனங்களை வெளியேற்ற முடியாமலும், கட்டுப்படுத்த முடியாமலும் காவல் துறையினா் சிரமப்படுகின்றனா். எனவே, திருவிழா காலங்களைப் போல வார விடுமுறை நாள்களிலும் கூடுதலான காவல்துறையினரை நியமித்து நகரின் எல்லையிலேயே வாகனங்களை நிறுத்தி, அங்கிருந்து பக்தா்கள் வசதிக்காக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.