பட்டா மாறுதலுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்…. வடவள்ளி வி.ஏ.ஓ உள்பட 2 பேர் கைது..!

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி காலனி சேர்ந்தவர் மனோகரன், இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் வடவள்ளியில் தனது வீட்டைஅவரது மகன் பாரதிக்கு செட்டில்மெண்ட் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் அந்த வீட்டின் பட்டா மாறுதலுக்காக இ சேவை மையத்தில் கடந்த 19ஆம் தேதி விண்ணப்பித்தார். இதையடுத்து கடந்த 20-ந்தேதி வடவள்ளியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று கிராம நிர்வாக அதிகாரி நவீனை (வயது 30) சந்தித்து பட்டம் மாறுதல் குறித்து கேட்டுள்ளார். அதற்கு நவீன் பட்டா மாறுதல் தொடர்பான சொத்தின் ஆவணங்களை எடுத்து வரும்படியும், மேலும் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து மனோகரன் கடந்த 27ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் நவீனை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா பெயர் மாறுதல் குறித்து கேட்டார். அதற்கு அவர் தனது உதவியாளர் மாணிக்கராஜ் (வயது50) என்பவரை சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். மனோகரன் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் மாணிக்கராஜுக்கு போன் செய்து பட்டா மாறுதல் குறித்து விவரம் கேட்டுள்ளார். அப்போது அவர் கிராம அலுவலர் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் வாங்குவார். நீங்கள் தெரிந்தவர் என்பதால் ரூ 4 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் நவினை சந்தித்து லஞ்சம் பணத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி கேட்டுள்ளார். உடனே நவீன் பட்டமாறுவதற்கு பரிந்துரை மட்டும் செய்ய ரூ 2 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று கூறியதாக தெரிகிறது ..இதையடுத்து கடந்த 28-ம் தேதி மனோகரன் கிராம நிர்வாக உதவியாளர் மாணிக்கராஜிடம் பட்டா மாறுதல் குறித்து கேட்டார். அப்போது அவர் ரூ. 2 ஆயிரம் கொடுத்தால் மட்டும் பட்டா மாறுதலுக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்..இதை யடுத்து மனோகரன் கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு திவ்யாவிடம் புகார் செய்தார். அதை தொடர்ந்து போலீசார் அவரிடம் ரசாயனமை தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர், நேற்று மதியம் வடவள்ளி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு சென்று கிராம நிர்வாகி நவீனிடம் ரூ 2 ஆயிரம் கொண்டு வந்துள்ளதாக கூறினார். அவர் அந்த பணத்தை உதவியாளர் மாணிக்ராஜிடம் கொடுக்குமாறு கூறினார் .இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி நவீன் பட்டமாறுதலுக்கு பரிந்துரை செய்தார். இதை மறைந்திருந்து கண்காணித்த போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு திவ்யா இன்ஸ்பெக்டர் ஷீலா மற்றும் போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து இரசாயன மை தடவிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 2 பேர் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்..