அமெரிக்காவில் வரலாறு காணாத கடுங்குளிர்- திணறும் மக்கள்..!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் மோசமான பனிப்புயல் இப்போது அங்கு ஏற்பட்டுள்ளது.

இனால் அங்கு பெரும்பாலான பகுதிகள் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது.

புவ வெப்பமயாமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. வெயில், குளிர் அல்லது மழை என எதுவாக இருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்படுகிறது.

அப்படியொரு மோசமான பாதிப்பு தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த தலைமுறையிலேயே இல்லாத அளவுக்கு அங்கு மிக மோசமான பனிப்புயல் இப்போது ஏற்பட்டுள்ளது. இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இதனால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது. இந்த மோசமான பனிப்புயலால் விமான நிலையங்கள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன. இப்போது குளிர் மிக மோசமாக உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அங்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பில்லாமல் வெளியே சென்றால் சில நிமிடங்களில் உறைந்துவிடுவோம். அந்தளவுக்கு அங்குக் குளிர் உச்சத்தில் உள்ளது.

இந்த கடுமையான பனி மற்றும் புயல் காற்று ஆண்டின் மிக முக்கிய விடுமுறை தினமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஏகப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல லட்சம் பேர் தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கார்களில் தங்கள் சொந்த ஊருக்குப் படையெடுத்து வருகின்றனர். இப்படி சுமார் 10 கோடி பேர் கார்களில் தங்கள் சொந்த ஊர் திரும்பலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பைடனும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நீங்கள் குழந்தைகளாக இருக்கும்போது, பனி பெய்கிறது என்றதும் உற்சாகமடைவீர்கள். ஆனால், உண்மையில் இப்போது மிக மோசமான ஒரு பனிப்பொழிவு இருக்கிறது. இது ரொம்பவே ஆபத்தானது. எனவே, பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார். விமானங்கள் மட்டுமின்றி கொட்டி கிடக்கும் பனியால் சில முக்கிய நெடுஞ்சாலைகள் கூட முடங்கியுள்ளன.

அங்குப் பனியை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இருப்பினும், பனி தொடர்ந்து பெய்து வருவதால் அதில் சிரமம் தொடர்கிறது. இதனால் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பே பல ஆயிரம் பேரால் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 22 ஆயிரம் விமானங்கள் தாமதமாகியுள்ளன. அதேபோல சுமார் 5,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களுக்கு அங்கு இதேநிலை தொடரும் என அஞ்சப்படுகிறது.

அழுத்தம் குறைந்து குளிர்ந்த காற்று நிறை வெப்பமான காற்றில் மோதும் போது, ​​”பாம்போஜெனிசிஸ்” எனப்படும் “வெடிகுண்டு சூறாவளியை உருவாக்கும் ஆபத்து உள்ளது. இதனால் புயல் வேகமாக வலுவடையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை நேற்று மிகக் குளிரான ஒரு இரவு ஏற்பட்டுள்ளது. அங்கு -40 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியுள்ளது. சில இடங்களில் -60 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் செல்லும் என அஞ்சப்படுகிறது. இது கிட்டதட்ட செவ்வாய்க் கிரகத்திற்கு இணையான குளிராகும்.

அங்கு சில நகரங்களில் ஒரே நாளில் சுமார் 20 செமீ அளவுக்கு பனி பெய்துள்ளது. கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்குப் பனியும் பனி சூறாவளியும் வீசி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பல்வேறு மாகாணங்களில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் பனி சூறாவளியால் அங்குப் பல ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.