பீஜிங்: முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட நாடான சீனாவில் தற்போது கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறதாகவும், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அங்கு உச்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பாக ஒரே நாளில் 3 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது
உலக நாடுகளுக்கு கொரோனா வைரசை பரப்பி விட்ட சீனா, தற்போது கொரோனா வலையில் சிக்கி தவித்து வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்தது.
அதன்பிறகு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தொற்று பரவலின் வேகம் தணிந்தது. உலக நாடுகள் தற்போது பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. இந்தியாவிலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக சில லட்சங்கள் வரை கொரோனா பாதிப்பு பதிவாகி அதிர வைத்து இருந்தது. தற்போது தொற்று பரவல் எண்ணிக்கை 200 க்கும் கீழாக குறைந்து உள்ளது. இதனால், கொரோனவை மக்கள் மறந்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கும் வேளையில் தற்போது, சீனாவில் பரவும் புதிய வகை பிஎப் 7 கொரோனா மீண்டும் பீதியை கிளப்பியுள்ளது.
இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பணிகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இந்த வைரஸ் ஊடுருவ தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சீனா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த கொரோனாவின் இந்த புதிய மாறுபாட்டு வகையான பிஎப்7 வைரசிடம் சிக்கி அல்லோலப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீன அரசு கையாண்ட முக்கிய ஆயுதமான ஜிரோ கோவிட் பாலிசிக்கு எதிராக அந்த நாட்டில் போராட்டங்கள் வெடித்தன.
இதனால், வேறு வழியின்றி சீனா கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டது. சீனாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விகிதமும் குறைவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, அந்நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்காமல் இருந்ததால், வீரியம் கொண்டு இந்த பிஎப் 7 வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. நடப்பு வாரத்தில் ஒரு நாளில் மட்டும் நாள் ஒன்றுக்கு 37 மில்லியன் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டிசம்பர் மத்தியில் இருந்து ஜனவரி பிற்பகுதி வரையில் தற்போது சீனாவில் பரவும் இந்த கொரோனா அலையின் உச்சம் இருக்கும் என்றும் சீனாவின் உயர்மட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஒருநாள் பாதிப்பு மட்டும் சுமார் 3.7 கோடியாக பதிவாகியிருக்கும் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இது உலகில் வேறு எந்த ஒருநாட்டிலும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். சீனாவில் சுமார் 24 கோடி பேர் அதாவது மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் பேருக்கு நடப்பு டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் தொற்று பாதிக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்த தகவல் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது மட்டும் துல்லியமான தகவலாக இருந்தால் கடந்த ஜனவரி மாதம் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பேருக்கு பதிவாகி இருந்த முந்தைய எண்ணிக்கையை தாண்டிவிடும் என்பது கவனிக்கத்தக்கது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் சீனாவோ உண்மையான தகவலை குறைத்து வெளியிடுவதாகவும் ஒருபக்கம் விமர்சனங்கள் உள்ளன. அதாவது நாள் ஒன்றுக்கு 37 மில்லியன் பாதிப்பு பதிவாகி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்ட டிசம்பர் 20 ஆம் தேதி சீனா வெளியிட்ட அதிகாரப்பூர்வ பாதிப்பு எண்ணிக்கை என்பது வெறும் 3 ஆயிரத்து 049 மட்டுமே ஆகும்.
இதற்கிடையே அறிகுறி இல்லாமல் பாதிப்பு இருந்தால் அதை கொரோனா பாதிப்பாக காட்டுவதை சீனா நிறுத்திவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. உயிரிழப்பிலும் கூட சுவாச பிரச்சினைகள் உள்ளிட்ட சில காரணிகளால் உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்ப்பதோடு, இணை நோய்கள் இருந்து உயிரிழந்தால் அதை கொரோனா பாதிப்பு உயிரிழப்பாக சீனா சேர்ப்பதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Leave a Reply