புதுடெல்லி: இந்திய கடற்படையின் ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலக நாடுகளின் தற்போதைய நவீன வகை போரின் தாக்குதல் நடவடிக்கைகளில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்து, அதுபோன்ற சாதனங்களை உருவாக்கம் செய்யும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரூ.2,500 கோடி செலவில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் இந்திய கடற்படையின் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைசசகம் ஒப்புதலை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கப்பல், எக்ஸ்ட்ரா லார்ஜ் பிரிவில் 100 டன் எடைக்கு மேல் இருக்கும்.
இந்த கப்பலைக் கொண்டு நீருக்கு அடியில் மறைந்திருக்கும் எதிரிகளின் கப்பல் மற்றும் கடலின் மேற்பரப்பில் உள்ள கப்பல்களை துல்லியமாக அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியும். இது, இந்திய கடற்படைக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என முன்னாள் கடற்படை துணை தலைமை வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மேட் தெரிவித்துள்ளார். கண்ணி வெடிகள் இடுதல் மற்றும் கண்ணி வெடிகளை அகற்றுதல், கண்காணிப்பு மற்றும் ஆயுதங்களை ஏவுதல் போன்ற பல பணிகளுக்கு இத்தகைய கப்பல்களை பயன்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த சில மாதங்களில், இந்த திட்டத்துக்கான டெண்டரை இந்திய கடற்படை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்கள் மேக்-1 நடைமுறையின் கீழ் ஏலம் கோரும் என தெரிகிறது. எம்கியூ-9பி மற்றும் திரிஷ்டி ஹெர்ம்ஸ் 900 போன்ற ட்ரோன்களை மேம்படுத்துவதன் மூலம் அதன் ஆளில்லா நீண்ட தூர கண்காணிப்பு திறன்களை அதிகரிப்பதில் இந்திய கடற்படை கவனம் செலுத்தி வருகிறது.
Leave a Reply