ஐரோப்பிய யூனியனில் விரைவில் இணைகிறது உக்ரைன்-ஆவணங்கள் ஒப்படைப்பு.!!

கீவ் : ஐரோப்பிய ஒன்றியம் கூட்டமைப்பில் இணைவதற்கான முதற்கட்ட விண்ணப்பத்தை உக்ரைன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக தங்கள் நாட்டை உறுப்பினராக சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறிய உக்ரைன், அதற்காக முறையாக விண்ணப்பம் செய்து இருந்தது. இந்த நிலையில் நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான விண்ணப்பம் தொடர்பான கேள்வி தாள்களை பூர்த்தி செய்து அதனை ஐரோப்பிய ஒன்றிய தூதர் மட்டி மாசிக்காசிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உறுப்பினராக இணைப்பது குறித்து முடிவு எடுப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஐரோப்பிய யூனியனில் ஒரு நாடு உறுப்பினராக வேண்டும் என்றால் அதற்கு நீண்ட கால பிடிக்கும். ஒன்றியத்தில் உள்ள 27 உறுப்பு நாடுகளிடமும் தனித்தனியாக அனுமதியை பெறுவது எளிதான ஒன்று அல்ல. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு வருகை புரிந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Ursula von der Leyen , ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உறுப்பினர் ஆக்கும் பணிகளை வழக்கத்தை விட வேகப்படுத்துவதாக உறுதி அளித்தார். இதன் அடிப்படையிலேயே தற்போது உக்ரைன் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெற செய்யும் முயற்சி தீவிரம் அடைந்து வருகிறது.