ஆளுநரின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் அரசு செய்து கொள்ளாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடி காட்டினர். தொடர்ந்து, சாலையில் கருப்புக் கொடிகளை வீசினர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கோஷம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து கருப்புக் கொடி காட்டிய சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது:
“நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி முக்கிய பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர், பாஜக பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் உரையாற்றினர். நேரமில்ல நேரத்தை பயன்படுத்தி அரசிடம் கேள்வி கேட்கும்போது, உரிய பதிலளித்த பிறகே வெளிநடப்பு செய்து மரபு.
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டம் – ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் நேற்று தெளிவாக அறிக்கை அளித்துள்ளார்.
அதில், இந்த ஆர்பாட்டத்தில் ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.
அதேபோல், ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் ஆகியவற்றை வீசப்படவில்லை என்று தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் அளித்துள்ளார்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆளுநரின் பாதுகாப்பிற்காக மத்திய மண்டல காவல்துறை தலைவர் தலைமையில், 2 டிஐஜிக்கள், 6 எஸ்.பி.க்கள், 6 கூடுதல் எஸ்.பி.க்கள், 21 டி.எஸ்.பி.க்கள், 52 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள், 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினாலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் அரசு செய்து கொள்ளாது.
ஆளுநர் மீது ஒரு தூசும் விழாமல் பாதுகாப்பாக கூட்டிச் சென்றுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நடக்காத ஒன்றை நடந்தது போல் கற்பனையாக கூற வேண்டாம்” என்றார்.
Leave a Reply