உஷ்… முடியல… தமிழகத்தில் 7 டிகிரி வரை வெப்பம் உயரும்..!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏப்.21-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை அதிகமாக இருக்கக்கூடும்.

தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 21-ம் தேதி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

16 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக ஈரோடு, மதுரை விமான நிலையத்தில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. அடுத்தபடியாக கரூர் பரமத்தி, திருச்சி, வேலூரில் தலா104, மீனம்பாக்கம், சேலம், திருத்தணியில் தலா 103, தஞ்சாவூரில் 102, பாளையங்கோட்டை, திருப்பத்தூர், கடலூர், தருமபுரி, நாகப்பட்டினம், புதுச்சேரியில் தலா 101, நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.