எடப்பாடி வாழ்க என கோஷமிட்ட உதயகுமார்… பசும்பொன் குருபூஜை விழாவில் விரட்டியடிப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60 ஆம் ஆண்டு குருபூஜை விழா நேற்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சியில், 30-ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெறுகிறது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வர உள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பசும்பொன் கிராமத்தில் ஆய்வு செய்தார். மேலும் கண்ட்ரோல் ரூம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டார்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வகையில் மாவட்டம் முழுதும் சுமார் 10,000 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், 14 இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும், நேரடியாக சென்னையிலிருந்து இதை கண்காணிக்கும் வகையில் சிறப்பு கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் காவல்துறை ஐ.ஜி அஸ்ரா கார்க்.டி.ஐ.ஜி மயில்வாகனன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராமநாதபுரம் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் அ.தி.மு.க-வினர் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை செய்யும் நோக்கோடு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, முன்னதாக தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வங்கி பெட்டகத்திலிருந்து தன்னிடம் கொடுக்க வேண்டும் என இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினர் கடும் போட்டியிட்டனர்.

இதைத் தொடர்ந்து இ.பி.எஸ் சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கட்சியின் உள் கட்சி பூசலில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி தங்க கவசத்தை ராமநாதபுரம் டி.ஆர்.ஓ காமாட்சி கணேசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பசும்பொனில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட தங்க கவசத்தை அதிகாரிகள் முன்னிலையில் அணிவிக்கப்பட்டனர்.

இந்தப்பிரச்சனைகளில் ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள் எடப்பாடி கும்பலால் மீண்டும் சலசலப்பு நடந்துள்ளது. முத்துராமன் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று  காலையில் தொடங்கிய போது அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க-வினர் வந்து தேவர் நினைவிடத்தில் மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்.

அப்போது ‘எடப்பாடியார் வாழ்க வாழ்க’ என முழக்கமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உதயகுமார் வெளியேறச் சொல்லி கோஷமிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போலிஸார் பாதுகாப்புடன் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அனைத்துத் தரப்பு மக்களும் வந்து செல்லும் இடத்தில் எடப்பாடியை புகழ்ந்து கோஷம் போட்டது மலிவான அரசியல் விளம்பரம் என அப்பகுதி மக்கள் விமர்சித்துள்ளனர்.