திம்பம் மலைப்பாதையில் கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அபராதம்..!

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திம்பம் மலைப்பாதையில் 16.2 டன் எடை அளவு மற்றும் 6, 8  சக்கரங்கள் கொண்ட சரக்கு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும். கூடுதல் பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள், 10 மற்றும் 12 சக்கரங்கள் கொண்ட சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 6 மற்றும் 8 சக்கரங்கள் கொண்ட சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் வட்டாரப் போக்குவரத்து துறை, காவல் துறை மற்றும் வனத்துறை என்ன மூன்று துறை அதிகாரிகளும் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக கூடுதல் பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட்டரமணி தலைமையில் தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம், ஆசனூர் வனச்சரக அலுவலர் பாண்டியராஜன் ஆகியோர் ஆசனூரில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள எடை மேடையில் சரக்கு லாரிகளை எடை போட்டு பரிசோதித்து கூடுதல் பாரம் ஏற்றி வந்த லாரிகளை கண்டறிந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக உள்ள  ஒவ்வொரு டன்னுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.