காவல்துறை சார்பில் கடம்பூர் மலை கிராம மக்களுக்கான மருத்துவ முகாம் – எஸ்பி ஜவகர் தொடங்கி வைத்தார்..!

சத்தியமங்கலம் :  போலீஸ் பொதுமக்கள் நல்லறவை மேம்படுத்தும் பொருட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு சார்பில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மலை கிராம இளைஞர்களுக்கான கைப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. டான் போஸ்கோ மாணவர் விடுதி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஈரோடு எஸ்பி ஜவகர் கலந்து கொண்டு மலை கிராம இளைஞர்களிடையே தற்போது கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசியதோடு, போதை பொருள் விழிப்புணர்வு குறித்து பேசினார்.
பின்னர் கைப்பந்தாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி மலை கிராமத்தில் நக்சல் தடுப்பு பிரிவு, ஈரோடு செல்வா சேரிடபுள் டிரஸ்ட், நந்தா மருத்துவக் கல்லூரி, ஆதித்யா மருத்துவமனை, அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமினை எஸ்.பி. ஜவகர் தொடங்கி வைத்து மலை கிராம மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை வழங்கினார்.  மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தை திருமணம் மற்றும் இள வயது கர்ப்பம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் கடம்பூர் எஸ்ஐ சிவகுமார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.